விளையாட்டு

மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் 17 வயதுக்கு கீழ்ப்பட்ட காற்பந்து போட்டி; மைல்கில்ஸ் எஃப்சி வாகை 

27/04/2025 07:05 PM

களும்பாங், 27 ஏப்ரல் (பெர்னாமா) - மைல்கில்ஸ் அறவாரியத்தில் உள்ள மாணவர்களை குறிப்பாக விளையாட்டுத் துறையில் ஆர்வமிக்கவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு முறையான காற்பந்து விளையாட்டுக்கான பயிற்சி அளித்து வந்த அந்த அறவாரியம், இன்று காலை அதன் மைதானத்தில் 17 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான காற்பந்து போட்டி ஒன்றை நடத்தியது.

மைல்கில்ஸ் அறவாரியத்தைச் சேர்ந்த மாணவர் குழுவுடன் இணைந்து களும்பாங் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் எட்டு குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில் மைஸ்கில்ஸ் எஃப்சி முதல் நிலையில் வெற்றி பெற்றது.

இங்குள்ள மாணவர்கள் கல்வியில் ஆளுமைப் பெறாவிட்டாலும் தொழிற்கல்வி, கைத்தொழில், கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இயல்பாகவே மிகுந்த துடிப்பு மிக்கவர்களாக உள்ளதாக மைஸ்கில்ஸ் தலைமை செயல்திட்ட அதிகாரி தேவஷர்மா கூறினார்.

"நாங்கள் பயிற்சி அளிக்கும் மாணவர்களில் யாராவது ஒருவர் இங்கிருந்து வெளியேறும் சிறந்த காற்பந்து விளையாட்டளராக உரிமாறினானே அது எங்களுக்குப் பெரிய விஷயம்தான். அந்த அடிப்படையில் தான்  ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இது ஆரம்பிக்கப்பட்டது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு ஓர் அங்கீகாரம் வேண்டுமென்பதைக் கருத்தில் கொண்டே போட்டி வடிவில் இது உருவாக்கப்பட்டது. முதலில் மைஸ்கில்ஸ் அறவாரியத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்ட வேளையில், தற்போது மற்ற குழுவினருடனும் மோதும் அளவிற்கு நமது மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்து கொண்டனர்," என்று அவர் கூறினார்.

மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இம்முயற்சிக்கு ராயல் சிலாங்கூர் காற்பந்து கழகமும் முழு ஒத்துழைப்பு வழங்கி இருந்தது.

அதன் அடிப்படையில், அந்த அகாடமியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சுல்தான் என்ற இரு பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள மாணவர்களுக்கு இலவசமான முறையில் பயிற்சி அளித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது ஆண் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டு வரும் வேளையில், வருங்காலத்தில் இவ்விளையாட்டில் ஈடுபாடுடைய மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்க தமது தரப்பு எண்ணம் கொண்டுள்ளதாக தேவஷர்மா கூறினார்.

"இங்கு மட்டுமல்ல இந்த வட்டாரத்தில் காற்பந்து விளையாட்டில் ஆர்வமுடைய மாணவிகளை முதலில் ஒன்று திரட்ட வேண்டும். அதற்கு பின்னர் வேண்டுமானால் நமது பயிற்சியாளர்களுடன் இது குறித்து பேசலாம். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பிரத்தியேகமான சில பயிற்சிகளையும் ஏற்பாடு செய்யலாம்," என்றார் அவர்.

இப்போட்டியில் இரண்டாவது நிலை வெற்றியாளராக ராயல் சிலாங்கூர் கிளப்பும், மூன்றாவது நிலையில் களும்பாங் இடைநிலைப்பள்ளியும் தேர்வு பெற்றது.

சிறந்த விளையாட்டாளராக மைஸ்கில்ஸ் எஃப்சியைச் சேர்ந்த மகேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து சிறந்த கோல் காவலராக களும்பாங் ஜூனியரைச் சேர்ந்த அஸிம் முஹைமினும், இறுதிச்சுற்றின் MAN OF THE MATCH பட்டத்தை சிலாங்கூர் கிளப்பைச் சேர்ந்த கோகுலனும் தட்டிச் சென்றனர்.  

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கணிசமான தொகை, நற்சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)