பொது

ஆஸ்திரேலிய பிரஜையின் மரண விசாரணை தீர்ப்பை பினாங்கு உயர் நீதிமன்றம் நிலைநிறுத்தியது

28/04/2025 05:16 PM

ஜார்ச்டவுன், 28 ஏப்ரல் (பெர்னாமா) --   அண்ணா ஜென்கின்ஸ் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய பிரஜையான அன்னபூரணி ஜென்கின்சின் இறப்பு தொடர்பான மரண விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பினாங்கு உயர் நீதிமன்றம், இன்று நிலைநிறுத்தியது.

அவரின் மரணத்தை ஒரு கொலையாக வகைப்படுத்த எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்காததைத் தொடர்ந்து, நீதிபதி ரொஃபியா முஹமட் அம்முடிவைச் செய்தார்.

விசாரணையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் ஜென்கின்சின் மரணத்திற்கான காரணத்தை உறுதியாக நிர்ணயிக்க முடியாது என்றும் நீதிபதி ரொஃபியா தெரிவித்தார்.

இருப்பினும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விருப்பத்தின் அடிப்படையில் விசாரணையைத் தொடர்வதற்கான உத்தரவை வழங்க அரசுத் தரப்பு துணை வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மரண விசாரணை நீதிமன்றத்தின் பொதுவானத தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான முடிவை முன்வைக்கும்போது, ​​கொலை என்பது மரண விசாரணை அதிகாரியால் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்று ரொஃபியா விளக்கினார்.

மேலும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் மற்ற தரப்பினரும் இதில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், அதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் அது ஊகமாகவே உள்ளதாகவும் அவர் கூறினார்.

மரணத்திற்கான காரணம், மரணத்தின் தன்மை அல்லது அண்ணா ஜென்கின்சின் மரணத்துடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவியல் கூறுகளையும் தீர்மானிக்க கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று மரண விசாரணை அதிகாரி நோர்சல்ஹா ஹம்சா, 2023-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

2017-ஆம் ஆண்டு பினாங்கில் விடுமுறையில் இருந்தபோது, திடீரென காணாமல் போன அவரின் உடல், 2020-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)