பொது

ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பிக்கும் முயற்சியில் எஸ்பிஆர்எம்

29/04/2025 04:05 PM

புத்ராஜெயா, 29 ஏப்ரல் (பெர்னாமா) -  ஒருங்கிணைந்த முறையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் 2012 ஜகார்த்தா அறிக்கையின் 16 கொள்கைகளுக்கு இணங்க தென்கிழக்கு ஆசியாவில் சட்ட அமலாக்கம் மற்றும் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வருகிறது.

ஆசியான் நிறுவனங்களின் தலைவர்களை ஒன்றிணைத்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் ஊழல் எதிர்ப்பு உத்திகளை நெறிப்படுத்துவதும் அம்முயற்சிகளில் அடங்கும் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

"இந்த ஜகார்த்தா அறிக்கை முன்பு ஜகார்த்தாவில் வெளியிடப்பட்டது. அதில் 16 கொள்கைகள் முடிவு செய்யப்பட்டன. இப்போது ஜகார்த்தா அறிக்கையை புதுப்பிக்க விரும்புகிறோம். இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்கம், ஊழல் எதிர்ப்பு, சட்ட அமலாக்க  நிறுவனங்களைப் புரிந்து கொள்ள முடியும். அந்தக் கொள்கைகளை நாம் தொடரலாம். மேலும் ஒரு சிறந்த வழியைக் கண்டறியலாம். ஊழலை ஒன்றாக எதிர்த்துப் போராடும் எங்கள் நோக்கத்திற்கான ஒரு சிறந்த முறை," என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில் 2025-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய ஊழல் எதிர்ப்பு  மாநாட்டில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் அசாம் பாக்கி அவ்வாறு கூறினார்.

இம்முறை நடைபெற்ற மாநாட்டில் 'கோலாலம்பூர் அறிக்கை' எனப்படும் புதிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வரையப்பட்டதாகவும் இம்மாநாடு முடிந்ததும் அது அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து நடைபெறவிருக்கும், ஆசியான் ஊழல் எதிர்ப்புக் கூட்டம், மலேசியா தலைமையில் நடைபெறும் என்றும் அசாம் பாக்கி அறிவித்தார்.

இதனிடையே, இதர வளர்ச்சி குறித்து கருத்துரைத்த டான் ஶ்ரீ அசாம் பாக்கி, பகாங், ரவுப்பில் நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.

இவ்விசாரணை தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், நிர்வாகத்தை மையமாகக் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் புதிய நிலங்களை எவ்வாறு ஆராய்வது மற்றும் பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் காண்பதிலும்  விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

"2021 ஆம் ஆண்டில் கூட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒருவேளை நில அலுவலகத்தால் அது நிறைவுபெற்றிருக்கலாம். ஆனால் இந்த புதிய வழக்கில், புதிய ஆய்வு எவ்வாறு செல்கிறது என்பதைப் பார்ப்போம். எனவே, அது நடந்தபோது, ​​குடியேறிகளில் பாதி பேர் 1974-இல் ஆய்வு செய்யத் தொடங்கியதாகக் கூறினர். ஒருவேளை அது 74ஆக இருந்தால், மரங்கள் சுமார் 40 ஆண்டுகளோ அல்லது 50 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேல் பழமையானதாக இருக்கலாம். எனவே 8, 9 வயதுடைய மரங்கள் மற்றோர் ஆய்வுக்கு உட்படுகின்றன," என்றார் அவர்.

அதேவேளையில், விசாரணை செயல்பாட்டை உறுதி செய்யும் பொருட்டு, ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளும் 
இதில் உட்படுத்தப்படும் என்று அசாம் பாக்கி தெரிவித்தார்.
 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)
 

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை