கோலாலம்பூர், 17 நவம்பர் (பெர்னாமா) -- சபா மாநிலத்தின் கனிம கொள்முதல் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்க அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஐவர் அழைக்கப்பட்டுள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்பிஆர்எம் இன்று உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பான தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ்பிஆர்எம் அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டுள்ளது.
சபாவில் கனிம திட்டங்களைக் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக சந்தேகத்தின் பேரில் வர்த்தகர் ஒருவர் மீது தங்களுக்கு இதற்கு முன்னர் புகார் கிடைத்ததாக எஸ்பிஆர்எம் தெரிவித்தது.
தொடக்கக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட வர்த்தகரை உள்ளடக்கிய ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் சபா மாநிலத்தைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்புடையத் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில், எந்தவொரு ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, விசாரணையை வெளிப்படையாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்ய அமலாக்கத் தரப்புக்கு வாய்ப்பளிக்குமாறும் எஸ்பிஆர்எம் கேட்டுக் கொண்டது.
ஒரு மாநில திட்டத்தின் விண்ணப்பத்தை ஆதரிப்பதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான ரிங்கிட்டைப் பெற்றதாகக் கூறப்படும் சில காணொளி பதிவுகளை அண்மையில் செய்தி தளம் ஒன்று வெளியிட்டது.
சம்பந்தப்பட்ட திட்டத்திற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதால், மூத்த பதவிகளில் இருப்பவர்கள் உட்பட அரசியல்வாதிகளிடம் பணத்தைத் திரும்பக் கேட்கும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ள வர்த்தகரின் முகம் தெளிவாக தெரியவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)