பொது

டத்தோ ஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட நால்வருக்கு இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு தடுப்பு காவல்

30/04/2025 05:29 PM

புத்ராஜெயா, 30 ஏப்ரல் (பெர்னாமா) --   36 கோடி ரிங்கிட் மதிப்புள்ள தவறான விவரங்கள் கொண்ட கோரிக்கைகளைச் சமர்பித்ததாக சந்தேகிக்கப்படும், டத்தோ ஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட நால்வருக்கு, இன்று தொடங்கி சனிக்கிழமை வரை நான்கு நாள்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, அவர்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் இர்சா சுலைக்கா புர்ஹானுடின் பிறப்பித்தார்.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில், நேற்று மாலை 4 முதல் 6 மணியளவில் விளக்கமளிக்க வந்தபோது 50 முதல் 70 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2016 தொடங்கி 2017-ஆம் ஆண்டு வரை அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்துள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில், சுமார் 130 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி ஏறக்குறைய 36 கோடி மதிப்புள்ள தவறான கோரிக்கைகளை அவர்கள் சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதனிடையே, இக்கைது நடவடிக்கை குறித்து, எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை பிரிவின் துனை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குஷைரி யஹ்யாவைத் தொடர்பு கொண்டபோது, அவர் அதனை உறுதிப்படுத்தினார்.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 18-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)