அலோர் ஸ்டார், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை அலோர் ஸ்டார் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 600 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், மாலை மணி மூன்று அளவில், அந்நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட தம்பதியரை தமது தரப்பு கைது செய்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சித்தி நோர் சலாவாத்தி சாட் தெரிவித்தார்.
''இந்தச் சோதனையில், 10,340 எரிமின் 5 வகை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 2846.29 கிராம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தவிர்த்து, 483.23 கிராம் என்று மதிப்பிடப்பட்டுள்ள கெத்தாமின் வகை மற்றும் தூள் வடிவில் MDMA வகை போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். அதன் எடை 364.2 கிராம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.
போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்டதாக நம்பப்படும் ஐந்து லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் போலீஸ் பறிமுதல் செய்ததாக ACP Siti Nor Salawati கூறினார்.
கெடாவிற்கு வெளியில் இருந்து பெறப்பட்டதாக நம்பப்படும் அந்த அனைத்து போதைப் பொருளும், சுமார் மூவாயிரத்து 200 போதைப் பித்தர்களுக்கு விநியோகிக்கப்படலாம்.
1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம், செக்ஷன் 39B-யின் கீழ் விசாரிக்க, அவர்கள் இருவரும் மே ஐந்தாம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)