புத்ராஜெயா, 30 ஏப்ரல் (பெர்னாமா) -- கோழி முட்டைகளுக்கான உதவித் தொகை கட்டம் கட்டமாக நிறுத்தப்படவிருப்பதால், கோழி முட்டைகளின் விநியோகம் மற்றும் விற்பனையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக மடானி அரசாங்கத்தின் பேச்சாரளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில், கோழி முட்டைகள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டபோது அதற்கான உதவித் தொகை அறிமுகப்படுத்தப்பட்டதாக ஃபஹ்மி விவரித்தார்.
கோழி முட்டைகளின் கையிருப்பு மற்றும் உற்பத்தி தற்போது நிலையாக இருப்பதை கருத்தில் கொண்டு, உதவித் தொகையை படிப்படியாகக் குறைக்கும் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின் முடிவு நியாயமானது என்று அமைச்சரவை கருதுவதாக தொடர்பு அமைச்சருமான அவர் கூறினார்.
"தொற்றுநோய் காலத்தில் கோழி முட்டைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது குறித்து முன்னதாக அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டது. கொவிட் தாக்கியபோது, அந்நேரத்தில் நிகழ்ந்த பல விவகாரங்களின் விளைவாக விநியோகத்தில் சிக்கல்கள் இருந்தன. இன்று கையிருப்பு அடிப்படையில், உற்பத்தி அடிப்படையில், இது (கோழி முட்டைகள் கையிருப்பு) ஒரு நேர்மறையான போக்கைக் காட்டுகிறது. எனவே, கே.பி.கே.எம்-இன் பரிந்துரை பொருத்தமானது என்று அமைச்சரவை கருதுகிறது,'' என்றார் அவர்.
ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி தொடங்கி முட்டைகளுக்கான உதவித் தொகை முற்றாக நிறுத்தப்படுவதற்கு முன்னர், ஒரு முட்டைக்கு அரசாங்கம் வழங்கி வந்த 10 சென் உதவித் தொகை நாளைத் தொடங்கி 5 சென்னுக்கு குறைக்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)