ஜோகூர் பாரு, 01 மே (பெர்னாமா) -- பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றங்களின் நிலவரத்தை, மலேசியா அணுக்கமாக கண்காணித்து வருகிறது.
தெற்காசியக் கண்டத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் ஐக்கிய நாடுகளின் சபை, ஐ.நா, பங்காற்ற முடியும் என்றும் நம்புவதாக தற்காப்பு அமைச்சர், டத்தோ ஶ்ரீ முஹம்ட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
போர் தொடங்குவதைத் தவிர்க்க இரு நாடுகளாலும் ஒரு சிறந்த தீர்வை எட்ட முடியும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
''இரண்டு நாடுகளும் மலேசியாவிற்கு நட்பு நாடுகள். ஆகவே, அவர்கள் போர் புரிவதை நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில் போர் ஏற்பட்டால், குறிப்பாக இரு நாட்டு மக்களுக்கும், அது நிச்சயமாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,'' என்றார் அவர்.
இன்று, ஜோகூரில், மலேசிய ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் சங்கம், பி.வி.ஏ.டி.எம்-இன் 56-வது வருடாந்திர பேராளர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் முஹமட் காலிட் அவ்வாறு கருத்துரைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)