உலகம்

ஜெலும் நதியில் நீர்மட்டம் உயர்வு - அச்சத்தில் பொதுமக்கள்

02/05/2025 06:11 PM

முசாஃபராபாத், 02 மே (பெர்னாமா) -- பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் முசாஃபராபாதில் உள்ள ஜெலும் நதியில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அந்நதிக்கரை பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அச்சத்திலும் கவலையிலும் இருக்கின்றனர். 

இந்தியா வழக்கத்தை விட அதிகமான தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டிருப்பது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தத்தினால், முக்கியமான வெள்ள தரவுகள் துண்டிக்கப்பட்டது போன்ற காரணங்களினால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தியா தண்ணீரை திறந்துவிடும்போது, அந்த ஆற்றங்கரையின் நீர்மட்டம் அதிகமாவதோடு, அதுவே தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அங்கு வசிக்கும் சிலர் கூறினர். 

''இந்தியா தண்ணீரை திறந்துவிட்டபோது, ​​ஆற்றின் நீர் எட்டு முதல் பத்து அடி வரை உயர்ந்தது. குறிப்பாக எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அதிக தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்ற செய்திகளைக் கேட்ட பிறகு, மிகுந்த பயமும் நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது'', ரஃபிக் உசேன் கூறினார். 

''நான் ஆற்றைக் கடந்து மீன்பிடித்து, உள்ளூரில் விற்கிறேன், போதுமான அளவு கிடைக்கும். கடந்த வாரம், நான் வலைகளை விரித்தேன், ஆனால் இரு நாட்களுக்குப் பிறகு, திடீரென பத்து அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்தது. நான் திரும்பி வந்த நேரத்தில், வலைகள் போய் விட்டன. எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது'', என்று ஹமிட் உசேன் தெரிவித்தார். 

1960-ஆம் தொடங்கி இரு நாடுகளுக்கும் ஒத்துழைப்பின் அரிய அடையாளமாக இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)