கோலாலம்பூர், 04 மே (பெர்னாமா) -- கடந்தாண்டு அக்டோபரில், இணையம் வழியான முதலீட்டு மோசடி ஒன்றில் சிக்கி, நிறுவன உரிமையாளர் ஒருவர் 18 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
உள்ளூரைச் சேர்ந்த 66 வயதுடைய அந்த ஆடவர், குறுகிய காலத்தில் பெரிய லாபம் கொடுக்கும் முதலீட்டு விளம்பரத்தை சமூக ஊடகத்தில் கண்டு அதில் ஈர்க்கப்பட்டு ஏமாற்றம் அடைந்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
அவ்விளம்பரத்தில் ஈர்க்கப்பட்ட அவ்வாடவர் தொடர் தகவல்களுக்காக அங்கு வழங்கப்பட்டிருந்த இணைப்பை அழுத்தியுள்ளார்.
பின்னர், முதலீட்டு தொகையில் 200 விழுக்காடு லாபத்தை மூன்றே மாதங்களில் பெற முடியும் என கூறப்பட்டதை அவர் நம்பியதாக, தமது முகநூல் பதிவில் குமார் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில், வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 18 லட்சம் ரிங்கிட் தொகையைச் செலுத்திய அவர், மோசடி கும்பல் கூறிய செயலியையும் பதிவிறக்கம் செய்திருக்கிறார்,
எனினும், அதிலிருந்து எவ்வித லாபத்தையும் இதுவரை அவர் பெறவில்லை என்று குமார் குறிப்பிட்டார்.
இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் செக்ஷன் 420-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)