கோலாலம்பூர், 04 மே (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி, புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டதாக நம்பப்படும் பமேலா லிங் யூ காணாமல் போனது தொடர்பில் போலீசார் இதுவரை 12 சாட்சியாளர்களின் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
பமேலா குடும்ப உறுப்பினர்கள், எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் மற்றும் அவரின் வழக்கறிஞர் அதில் அடங்குவர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
பமேலா இருக்குமிடம் தொடர்பில், இதுவரை எந்தவொரு தகவலோ அல்லது அதற்கான அறிகுறியோ தென்படவில்லை என்று இன்று தொடர்புகொண்டபோது டத்தோ ருஸ்டி கூறினார்.
எஸ்.பி.ஆர்.எம்-இன் கீழ் நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் விளக்கும் அளிப்பதற்காக கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி 42 வயதுடைய லிங், எஸ்.பி.ஆர்.எம் அலுவலகம் செல்லும் வழியில் காணாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடபான புகாரை, அதே நாள் பிற்பகல் மணி 3.02-க்கு தங்கள் தரப்பு பெற்றதாக ருஸ்டி தெரிவித்தார்.
Grab வாகன சேவை மூலம் அங்கு புறப்பட்ட லிங், பிற்பகல் மணி 2.08-க்கு அந்த அலுவலகத்தை வந்தடைந்துவிடுவார் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மணி இரண்டுக்குப் பின்னர் அவரின் வழக்கறிஞரும் குடும்ப உறுப்பினர்களும் லிங்கை தொடர்புகொள்ள முடியாமல் போனது.
இது குறித்த தகவல் அறிந்தவர்கள் 012-8866799 மற்றும் 012-8867979 என்ற எண்களில் அவரின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]