கோலாலம்பூர், 05 மே (பெர்னாமா) -- புதிய சந்தைக்கான விரிவாக்க முயற்சிகளை துரிதப்படுத்தும் நோக்கத்துடன், MATRADE எனப்படும் மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகத்திற்கு, ஐந்து கோடி ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்கும்.
பரஸ்பர வரி அமலாக்கத்தை அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்தின் உத்திகளில் இதுவும் ஒன்றாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் தேடல் செயல்பாடுகளை மையப்படுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் புதிய சந்தைகளில் ஈடுபட உதவுகின்றன. வணிகத்தை எளிதாக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும், உலகளாவிய மனித மூலதன நிபுணர்களையும் மலேசியாவிற்கு கொண்டு வருவோம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற தேசிய முன்னுரிமைப் பகுதிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை அழைத்து வருவோம்,'' என்றார் அவர்.
உலகளாவிய பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையால், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவதில், குறிப்பாக மேம்பாடு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அன்வார் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)