கோலாலம்பூர், 06 மே (பெர்னாமா) -- இன்றைய தலைமுறையினர் தங்களின் குழந்தைகளுக்குச் சுருக்கமாகவும் எளிமையாகவும் பெயர் வைக்கவே விரும்புகின்றனர்.
அவ்வாறு வைக்கப்படும் பெயர்கள் வெறும் அழைப்புச் சொல்லாக மட்டுமின்றி அர்த்தம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
அவர்களின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் tamilname.com எனும் தமிழ்ப்பெயர் இணையச் செயலியை உருவாக்கி, அதன் முன்னோட்ட பதிப்பை இலவசமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளிலும் மே முதலாம் தேதி தொடங்கி மலேசிய தமிழ்க் கணினி வல்லுநர் முகிலன் முருகன் வெளியிட்டுள்ளார்.
தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி, இச்செயலியை உருவாக்கியதாக அதன் உருவாக்குநர் முகிலன் முருகன் கூறினார்.
''தற்போதைய புதிய நுட்பமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இதனில் இயங்குமாறு நான் செய்துள்ளேன். பிறந்த நாள், நேரம், இடத்தைக் கொடுத்தால் மட்டும் போதும். பிள்ளையின் நாள்மீ நட்சத்திரம் ஓரை ராசிப்படி எந்த எழுத்தில் பிள்ளையின் பெயர் தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என கணிய சோதிடத்தின் அடிப்படையில் இச்செயலி உங்களுக்குப் பரிந்துரை வழங்கும்'', என்று அவர் கூறினார்.
இச்செயலி சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பெயர்களை வழங்கும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அதனை தேர்வுச் செய்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
மேலும், பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு பெயர்களுக்கும், அதன் பொருள் மற்றும் சிறப்புகள் வழங்கப்படும் என்று முகிலன் மேலும் விளக்கினார்.
''ஒவ்வொரு பெயருக்கும் அதன் பொருள், பெயரின் சிறப்புகள், வரலாற்று பின்னனி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதால் பெயர் வைக்கும் முன் இம்முழு செய்தியும், அப்பெயரின் தன்மை மீதான ஈர்ப்பும் அதிகரிக்கும். பிறகு, எண்கணித நம்பிக்கையில் பெயர் வைக்க விரும்புகிறவர்களுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த பெயருக்கான சிறந்த எழுத்து கூட்டு எண்களையும் இச்செயலி மேலும் வழங்கும்'', என்றார் அவர்.
இதனிடையே, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் tamilname.com எனும் இணையச் செயலியைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் விவரித்தார்.
''புதிதாக பிறந்த அல்லது பிறக்கவிருக்கின்ற குழந்தைகளின் பெற்றோர்கள், பெயர் தேடும் உறவினர்கள், இளம் தம்பதிகள் யார் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம். நல்ல தமிழ்ப் பெயர்களை எளிமையாக, விரல் நுணியில் தமிழ் மக்களுக்கு உதவுகின்ற பெருநோக்கத்துடன் இச்செயலி உருவாக்கி வெளியிடப்படுகின்றது'', என்று அவர் தெரிவித்தார்.
தமிழுக்கென இலவசமாக உருவாக்கப்பட்ட இச்செயலியைப் பயன்படுத்தி, பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள தமிழ்ப் பெயர்களை வைத்து பயன்பெற வேண்டும் என்று முகிலன் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)