ஜம்மு, காஷ்மீர், 08 மே (பெர்னாமா) -- நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களைக் குறிவைத்து இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் சில பகுதிகளில் உள்ள பலர் காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவத்தில், இந்தியாவச் சேர்ந்த13 பேர் கொல்லப்பட்ட வேளையில், 43 பேர் காயங்களுக்கு ஆளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி சில புறநகர்ப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை, இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, எதிர் தரப்பிலிருந்து மறுதாக்கல் தொடங்கியது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில், காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் எல்லை நகரங்கள் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டன.
வர்த்தகம் மற்றும் போக்குவரத்தைப் பொருத்தமட்டில் மிதமாக இருந்தாலும், அசம்பாவிதத்தைத் தடுக்கும் வகையில் அப்பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தாக்குதலில் ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களுக்கு குறிவைக்கப்பட்டதாக இந்தியா கூறியது.
கடந்த மாதம் காஷ்மீரில், இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அங்கு கலவரம் தொடங்கியது.
அதிலும் குறிப்பாக நான்கு தளங்கள் பஞ்சாபிலும், ஐந்து இடங்கள் பாகிஸ்தான் காஷ்மீரிலும் குறி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)