பொது

குழந்தை பராமரிப்பு மையத்தில் நான்கு மாத ஆண் சிசு நீரில் மூழ்கி பலி

18/03/2026 05:19 PM

புக்கிட் மெர்தாஜாம், 18 மார்ச் (பெர்னாமா) -- செபெராங் ஜெயா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில், கடந்த மார்ச் 9-ஆம் தேதி, நீரில் மூழ்கி நான்கு மாத ஆண் சிசு பலியானதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குழந்தையின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டதாக டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்தார். 

''நீரில் மூழ்கியதே மரணத்திற்கான காரணம் என்று மருத்துவர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எங்களின் விசாரணை அறிக்கை நிறைவடையும் தருவாயில் உள்ளது. நீதிமன்றத்தில் மேலும் 7 நாட்களுக்குக் கூடுதல் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர். 

இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே ஏழு நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் அவர் மீது விசாரணை நடைபெறும் நிலையில் கூடுதலாக ஏழு நாள்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார். 

முன்னதாக, ஹெல் ஹரித் முஹமட் ஷாஃபயிஸ் என்ற அந்த ஆண் சிசு, சுயநினைவின்றி செபெராங் ஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர், மார்ச் 9-ஆம் தேதி அதிகாலை மணி 4.20-க்கு உயிரிழந்தது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]