கோலாலம்பூர், 08 மே (பெர்னாமா) - மலேசிய மருத்துவ ஆராய்ச்சி மையம் CRM உட்பட நாட்டில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆசியானில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மருந்துகளின் விலையைக் குறைப்பதோடு கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை அதிகரித்து வட்டார பருவநிலைக்கு ஏற்ற புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தவும் இந்த ஒத்துழைப்பு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
மக்களின் நலனுக்காக ஆராய்ச்சி அம்சங்களுக்கு கவனம் செலுத்தப்படுவதையும் சிறந்த முடிவுகள் உருவாக்கப்படுவதையும் உறுதிசெய்ய, CRM உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்வார் கூறினார்.
"ஆனால் ஆசியான் ஒத்துழைப்பு உத்தி நெருக்கமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் பொருள், புனோம் பென் முதல் வியன்டியன் வரை சிங்கப்பூர் முதல் ஜகார்த்தா, பேங்காக் மற்றும் மணிலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வரை உள்ள முக்கிய ஆராய்ச்சி மையங்கள் இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக்க ஒன்றிணைந்து செயல்பட முடியும். செலவுகளைக் குறைத்து, புதிய கண்டுபிடிப்புகளைப் பெறுவதோடு நமது பருவநிலைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தக்கூடிய புதிய வகை மருத்துவங்களைப் பெற வேண்டும்,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில், CRM Trial Connect எனும் மாநாட்டை தொடக்கி வைத்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, 1970ஆம் ஆண்டுகளில் நாட்டில் உள்ள மருத்துவ ஆய்வு கழகமான IMR குறித்த நினைவலைகளை பகிர்ந்த கொண்ட பிரதமர், அப்போது மேற்கத்திய நாடுகளில் உள்ள நோய்கள் குறித்து மட்டுமே ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
நாட்டில் தற்போது மேற்கொள்ளப்படும் மருத்துவ ஆய்வுகள், பெரும்பான்மை மக்களைப் பாதித்திருக்கும் நோய்கள் குறித்த ஆய்வாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
"எனவே, ஐ.எம்.ஆர் வட்டாரத்தை சுற்றியிருக்கும் நோயாளிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அதே வேளையில், உலகில் இதர முக்கியமான பிரச்சனைகளைப் பற்றியும் பேசுகிறது. ஆனால், நமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது,'' என்று பிரதமர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)