புத்ராஜெயா, 08 மே (பெர்னாமா) -- புறநகர் வாழ் இளைஞர்கள், இலக்கவியல் கல்வியறிவைப் பெற்றிருப்பது மட்டுமின்றி எந்தவொரு சூழ்நிலைக்கும் தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக உருவாக்கும் மேம்பாட்டுத் திட்டத்தை வகுக்குமாறு, புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு, KKDW-விற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய சொத்தாகக் கருதப்படும் அவர்கள் எல்லைகளைக் கடந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தங்கள் தரப்பு எதிர்பார்ப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
உலகை ஆராய்ந்து, எல்லைகளைக் கடந்து, உலக அரங்கில் போட்டியிடக் கூடிய ஆற்றல் பெற்ற புறநகர் இளைஞர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்பதை, KKDW அமைச்சருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் விவரித்தார்.
''புதிய வேலை வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு புறநகர் உருவாக்க மையம் அமைக்கப்படுவதை ஒரு நாள் நான் காண விரும்புகிறேன். அதோடு, கிராம இளைஞர் தூதர் உருவாக்கபட வேண்டும். நமது இளைஞர்கள் அனைத்துலக அரங்கில் அறிவையும் அனுபவத்தையும் பெற வழிவகுக்கும் ஆசியான் புறநகர் இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை நிறுவ வேண்டும். அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒரு தளம் அல்லது குழு மூலம் இணைத்து, அதை வடிவமைத்து மெருகூட்டும் பணியை அமைச்சிடம் விட்டுவிடுகிறேன்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற KKDW-இன் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]