கோலாலம்பூர், 08 மே (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயா நோக்கிச் செல்லும் கெசாஸ் நெடுஞ்சாலையின் அவான் பெசார் ஓய்வெடுக்கும் பகுதி அருகே பயணத்திலிருந்த வேனிலிருந்து வெளியே குதித்து மரணமடைந்த பெண், அச்சம்பவத்திற்கு முன் அந்த வேன் ஓடுநரனான தமது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மரணமடைந்த 44 வயதுடைய அப்பெண் ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்காததாகவும் முன்னதாக சாலை விபத்துகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு முன்னர் வேன் பயன்பாடு குறித்து அவருக்கும் அவரின் கணவரான 50 வயதுடைய ஆடவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
அவ்வாக்குவாதத்தின்போது, திடீரென வேன் கதவை திறந்து அப்பெண் வெளியே குதித்துள்ளார்.
எனினும், அந்நடவடிக்கையை சற்றும் பொருட்படுத்தாத அவரின் கணவர் தொடர்ந்து வேனை செலுத்தி பயணத்தை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அதேநாளில் கைது செய்யப்பட்ட அவ்வாடவர் குற்றவியல் சட்டம் செக்ஷன் 304A-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு வரும் சனிக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]