கோலாலம்பூர், 09 மே (பெர்னாமா) -- இவ்வாண்டு இறுதியில் சாடௌ - புக்கிட் காயூ ஹித்தாம் எல்லைப் பகுதியில் கூட்டு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த, தாய்லாந்து பிரதமர் பெத்தொங்தான் ஷினாவாத்தும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொது நலன்கள் மற்றும் வருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண, வியாழக்கிழமை டத்தோ ஶ்ரீ அன்வாருடன் தொலைபேசியில் உரையாடியபோது, இது குறித்து விவாதிக்கப்பட்டதாக பெத்தொங்தான் தெரிவித்தார்.
சாடௌ - புக்கிட் காயூ ஹித்தாம் எல்லைப் பகுதியில் சோதனை மையத்தை இணைக்கும் புதிய எல்லை கடக்கும் சாலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அவர்கள் ஒப்புக் கொண்டதாக பெத்தொங்தான் ஷினாவாத் தமது X பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தாய்லாந்தின் தென் எல்லைப் பகுதியில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவத்தை தாய்லாந்தும் மலேசியாவும் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் இரு தரப்பின் எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
உலகளாவிய வர்த்தக சவால்களை எதிர்கொள்ள ஆசியான் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, மியன்மாரில் அமைதியை மீட்டெடுப்பதற்கான மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவுகளை வழங்குவது குறித்தும் அவர்கள் உரையாடினர்.
இம்மாத இறுதியில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் அன்வாருடனான கலந்துரையாடல் தொடரும் என்றும் பெத்தொங்தான் தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]