பொது

கிராம தத்தெடுப்பு திட்டம்: 10 சீரமைப்பு கட்டுமானங்கள் நிறைவு

10/05/2025 05:51 PM

தெலுக் இந்தான், 10 மே (பெர்னாமா) -- வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு, கே.பி.கே.டி-இன் மடானி கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 10 சீரமைப்பு கட்டுமானங்கள் நிறைவடைந்துள்ளன.

பேராக், தெலுக் இந்தான் கம்போங் பஹாகியாவில் உள்ள 8,670 குடியிருப்பாளர்கள் அதன்வழி பயனடைவார்கள் என்று கே.பி.கே.டி அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 31-ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்த அந்த 10 திட்டங்களில், சமூக மண்டபங்கள் மற்றும் குப்பைக் கிடங்குகள் உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக ஙா கோர் மிங் கூறினார்.

அதோடு, மைல்கல் கட்டுமானத்திற்கு 96,000 ரிங்கிட்டும் நிலையான கழிவு சேகரிப்பு மையத்தின் கட்டுமானத்திற்கு 70,000 ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டது.

''இங்குள்ள கிராம மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், எப்போதும் தூய்மையைப் பேண வேண்டும். பெரிய அளவில் செலவிடப்பட்ட சொத்துகள். கிட்டத்தட்ட 28 லட்சம் ரிங்கிட் செலவில் 11 திட்டங்கள். கிராம மக்களுக்கான உதவியை உறுதிச் செய்வதே அதன் நோக்கமாகும். ஆகவே, தற்போது கிராம மக்கள் தங்கள் அன்பான கிராமத்தை கவனித்துக் கொள்ளும் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. வசதிகள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யவும், 24 மணி நேரமும் செயல்படும் ஒரு மறைக்காணி அறையையும் நாங்கள் அமைத்துள்ளோம்,'' என்றார் அவர். 

கே.பி.கே.டி-இன் மடானி கிராம தத்தெடுப்பு திட்டத்திற்காக, PR1MA மலேசியா கழகமும் தங்களின் சமூக மேம்பாட்டு கடப்பாட்டிற்காக 91,810 ரிங்கிட்டை வழங்கியுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]