பட்டர்வெர்த், 09 மே (பெர்னாமா) -- விற்பனை செய்வதற்கான பொருள்களின் கையிருப்பை உட்படுத்திய கொமிசன் கட்டணம் தொடர்பில், தம் மீது சுமத்தப்பட்ட 28 குற்றச்சாட்டுகளை, தனியார் நிறுவனத்தின் முன்னாள் மூத்த கொள்முதல் நிர்வாகி ஒருவர் இன்று பட்டர்வெர்த் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்தார்.
‘tape’ தயாரிப்புகளின் விநியோகம் தொடர்பில், Altrapac நிறுவனத்தை ஏமாற்றி, தமது நான்கு வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ஒரு லட்சத்து 73,000 ரிங்கிட்டை பரிவர்த்தனை செய்ய வைத்ததாக, ஏ.புவனேஸ்வரி மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து ஜூன் 24-ஆம் தேதிக்குள், பினாங்கு, பட்டர்வெர்த், ஜாலான் பாகான் ஜெர்மால், விஸ்தா பெர்னாமாவில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.
பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 420-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 1,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவரை விடுவித்த நீதிமன்றம், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஜூன் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)