பொது

பெர்கேசோ சந்தா செலுத்துவதற்கான வாய்ப்பு மே இறுதி வரை நீட்டிப்பு

09/05/2025 08:11 PM

கோலாலம்பூர், 09 மே (பெர்னாமா) -- சமூக பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோ, சந்தா செலுத்துவதற்கான வாய்ப்பை, மே 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, FCLB எனப்படும் தாமதமான சந்தா பங்களிப்பிற்கான வட்டியை, நிலுவையில் வைத்திருக்கும் இரண்டு லட்சத்து 15-ஆயிரத்து 172 முதலாளிமார்கள், 50 விழுக்காடு கழிவு பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.

இச்சலுகையில், கோரிக்கை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நிறுவனங்கள் அல்லது ஊழியர்களைப் பதிவு செய்யத் தவறிய அல்லது விபத்துகளைப் புகாரளிப்பதில் தாமதம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள முதலாளிகள் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று, மனிதவள அமைச்சர் Steven Sim Chee Keong தெரிவித்தார்.

நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டு 40 விழுக்காட்டு பதிவு அதிகரித்துள்ளது.

"அனைத்து முதலாளிகளுக்கும் எனது அறிவுரை என்னவென்றால், தயவுசெய்து உங்கள் ஊழியர்களுக்கு பங்களிக்க முன் வாருங்கள் (பெர்கேசோ). மே 31-ஆம் தேதிக்குப் பிறகு 'எந்தவித சமரசமும் காணப்படாது'. பங்களிக்கத் தவறிய எவரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் முழு முயற்சி எடுப்போம்," என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)