விளையாட்டு

கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான  பூப்பந்து போட்டி; எடின்பெர்க், சிகாம்புட் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

28/09/2025 05:03 PM

செராஸ், 28 செப்டம்பர் (பெர்னாமா) - தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பூப்பந்து விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து கிளப் ஏற்பாடு செய்த 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பூப்பந்து போட்டியில், கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள 14 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 224 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று செராஸ் டி.பி.கே.எல் பூப்பந்து அரங்கில் இருபாலாருக்கும் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் எடின்பெர்க் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் பெண்கள் பிரிவில் சிகாம்புட் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடின.

கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து முதல் முறையாக இப்போட்டியை நடத்தினாலும் பள்ளி அளவில் சிறந்த ஆதரவு கிடைத்ததாக கிளப்பின் தலைவரும் ஏற்பாட்டுக்குழு தலைவருமான சேகரன் வேலாயுதம் தெரிவித்தார்.

மாணவர்களின் விளையாட்டுத் திறமை தம்மை வியக்கச் செய்ததோடு, ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய போட்டி விளையாட்டுகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஊக்குவிப்பையும்  ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

"நாங்கள் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மாணவர்களின் விளையாட்டுத் திறன் இருந்தது. 12 வயதுக்கு கீழ்ப்பட்ட பிள்ளைகள்தானே. ஆகவே ஆட்டம் மிதமான அளவில் இருக்கும் என்று தவறாக நினைத்துவிட்டோம். ஆனால் மாணவர்களின் அபார ஆற்றல் எங்களைத் திக்குமுக்காட வைத்தது," என்று அவர் குறிப்பிட்டார்

பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து  கிளப்பின் முயற்சி மாணவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக சரவணகுமார் பெருமாள் தெரிவித்தார்.

"தமிழ்ப்பள்ளிகளை உட்படுத்தி முதல்முறையாக நடைபெறும் பூப்பந்து போட்டி து என்று நான் கருதுகிறேன். மாணவர்களும் சிறந்த பயிற்சி பெற்று ஆர்வத்துடனும் உற்சாகத்தோடும் இதில் கலந்து தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்,'' என்று அவர் கூறினார்.

இதுவரை பள்ளி அளவில் களம் கண்ட தங்களுக்கு இப்போட்டி புதுவித அனுபவத்தை அளித்துள்ளதாக இப்போட்டியில் கலந்து கொண்ட  மாணவர்களும் கூறினர்.

இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் இரண்டாவது நிலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியும் மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் முறையே, சிகாம்புட் மற்றும் செந்தூல் தமிழ்ப்பள்ளிகள் வெற்றி பெற்றன.

பெண்கள் பிரிவில், தம்புசாமி தமிழ்ப்பள்ளி இரண்டாவது நிலையில் வெற்றி பெற்ற வேளையில், எடின்பெர்க் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளியும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை வென்றன. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)