கோலாலம்பூர், 02 அக்டோபர் (பெர்னாமா) -- பெண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த அழகுத் துறையில், தற்போது அதிகமான ஆண்களும் ஈடுபட்டு வருவதைச், சமூக வலைத்தளங்களில் பரவலாக காண முடிகின்றது.
இத்துறையில் முறையான பயிற்சிகளைப் பெற்று தனித் திறனைகளை வளர்த்துக் கொள்ளும் ஆண்கள், தங்களுக்கென வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் அழகுக் கலைத் துறையில் ஆண்களின் ஈடுபாடு வியப்பாக தோன்றினாலும், காலப்போக்கில் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.
மக்களின் ஆதரவும் குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பைபும் தங்களை இத்துறையில் பயணிப்பதற்கு ஊக்குவிப்பாக இருப்பதாக ஒப்பனைக் கலைஞர் சண்முகநாதன் சகாதேவன் தெரிவித்தார்.
''முன்பு சிலர் தயக்கம் காட்டினர். இன்று அந்த நிலை மாறிவிட்டது. பெண்கள் நிறையப் பேர் எங்களை அணுகுகின்றனர்,'' என்றார் அவர்.
இத்துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துவது எளிதான காரியம் அல்ல.
அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப ஒப்பனைச் செய்வதிலும் சேலை அணிவிப்பதிலும் அதிக சவால்கள் இருப்பதாக சேலை அணியாளர் விஷ்ணு வரதன் செல்வம் கூறுகின்றார்.
''திருமணப் பெண்களின் சேலையை மடித்து தயார் செய்வதற்கு எனக்கு ஒரு மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் நீடிக்கும்,'' என்றார் அவர்.
சில வேளையில், வாடிக்கையாளர்கள் தங்களது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளும் போது, பணி எளிதாக முடிவதோடு அதில் திருப்தி உள்ளதாகவும் விஷ்ணு வரதன் தெரிவித்தார்.
இக்கலையை முறையாக கற்றுக் கொள்வதற்கு மலேசியாவில் குறிப்பாக அரசாங்கத்தின் வழி, வாய்ப்புகள் இருப்பதை சண்முகநாதன் சுட்டிக்காட்டினார்.
எனவே, அழகுத் துறையில் ஆர்வமுள்ள ஆண்கள் உட்பட இளைஞர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினர்.
அண்மையில் பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளியேறிய பெர்னாமா செய்திகளின் பார்வைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சண்முகநாதனும் விஷ்ணு வரதனும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 7.30-க்கு பார்வை நிகழ்ச்சி ஒளியேறுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)