பிலிப்பைன்ஸ், 03 அக்டோபர் (பெர்னாமா) -- பிலிப்பைன்சில் ஏற்பட்ட ரிக்டர் அளவைக் கருவியில் 6.9-ஆக பதிவாகிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பொது தற்காப்பு அலுவலம், ஓ.சி.டி மேற்கொண்டு வந்த தேடல் மற்றும் மீட்புப் பணிகள் நேற்று மாலை நிறைவடைந்தன.
இப்பேரிடரில் 73 பேர் உயிரிழந்ததோடு 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் காணாமல் போனவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டதோடு, இடிபாடுகளில் யாரும் சிக்கியிருக்கவில்லை என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து தேடல் மற்றும் மீட்புப் பணிகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக அமலாக்கத் தரப்பினர் தெரிவித்தனர்.
போகோ நகரில் உள்ள இடிந்து விழுந்த தங்கும் விடுதி ஒன்றின் இடிபாடுகளில் இருந்து நேற்றிரவு மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன.
தற்போது பேரிடருக்கு பிந்தைய உதவிகள் மற்றும் மறு கட்டுமானப் பணிகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனிடையே, தங்களின் வீடுகள் இன்னும் உறுதியாக உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் அதிர்வுகள் குறித்து இன்னும் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் அரசாங்கம் அமைக்கும் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்படவுள்ளனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]