கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசிய காற்பந்து சங்கம், எப்.ஏ.எம் மற்றும் தேசிய அணியின் அயல் நாட்டு ஆட்டக்காரர்கள் எழுவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில், அனைத்துலக காற்பந்து சம்மேளனம் பிஃபா வழங்கிய காரணங்களை தாம் மிகக் கடுமையாக கருதுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
19 பக்கங்கள் கொண்ட பிஃபாவின் குற்றச்சாட்டு அறிக்கை, நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
''தொழில்நுட்பப் பிழைகள், அவர்களின் ஊழியர்களின் தவறுகள் என்று கூறி எப்.ஏ.எம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தாலும், பிஃபாவின் 19 பக்க அறிக்கை மிகவும் தீவிரமான அறிக்கை என்பதால், இவை அனைத்திலும் முன்னேற்றம் தேவை. இது நாட்டின் பிம்பத்தைப் பாதிக்கிறது. மேலும், அனைத்து மலேசிய காற்பந்து ரசிகர்களும் கோபமாகவும், ஏமாற்றமாகவும் இருப்பதோடு அதன் அடுத்த முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்;'' என்றார் அவர்
அதேவேளையில், அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவதற்கு முன், மேல்முறையீட்டு செயல்முறை முடிவடையும் வரை காத்திருப்பதாகவும் ஹன்னா தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)