சிப்பாங், 08 அக்டோபர் (பெர்னாமா) - சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்த காரணத்தினால் 23 மலேசிய தன்னார்வலர்களும் தடுத்து வைக்கப்படவில்லை.
மாறாக, Global Sumud Flotilla மனிதாபிமான பணியின்போது, அந்த உதவிகளை காசாவிற்கு கொண்டுச் செல்லும் வழியில் அனைத்துலக நீர்ப்பகுதியில் இருந்தபோது அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
"இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் இஸ்ரேலுக்குச் செல்லவில்லை, காசாவுக்குச் செல்ல விரும்பினர். ஆனால், இஸ்ரேலிய யூதர்களால் முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். எனவே, மக்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். பிரதமரின் தலைமைத்துவம், ஏற்கனவே மிக உயர்ந்த அரச தந்திர அதிகாரத்தைப் மேற்கொண்டுள்ளதால், எங்கள் பிள்ளைகளை மீண்டும் கொண்டு வர முடிந்தது, கடவுளுக்கு நன்றி," என்றார் அவர்.
அனைத்து தன்னார்வலர்களும் பாதுகாப்பாக திரும்பியது, மலேசிய அரச தந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் இது அனைத்துலக ஒற்றுமையை பிரதிபலிப்பதாகவும் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
அதோடு, நிம்மதியையும் தேசிய பெருமைக்கான தருணத்தையும் இது காட்டுவதாக அவர் விவரித்தார்.
அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்துலக நீர்ப்பகுதியில் அவர்களின் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் இஸ்ரேலில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மலேசிய தன்னார்வலர்களை விடுவிப்பதில் துருக்கிய அரசாங்கம் முக்கிய பங்கு வகித்ததாக முஹமட் ஹசான் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)