சிப்பாங், 08 அக்டோபர் (பெர்னாமா) - கேப்டன் பிரபா என்று அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவியல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்த குற்றச்சாட்டிற்காக 13 ஆடவர்கள் இன்று சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் 19 முதல் 37 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
27 வயதான ம. லவின்தரன், 37 வயதான ம. மேகநாதன், 20 வயதான ம.தினேஸ், 29 வயதான க.உதயரகு, 31 வயதான ம.தினேஸ், 19 வயதான ச. ஜீவன் மற்றும் 28 வயதான ஜ.சங்கரனரயனன் ஆகியோர் மீது இன்று குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டுள்ளதால் நீதிபதி அமாட் சுவட் ஒத்மான் அஹம்ட் ஃபுவாட் ஒத்மான் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டபோது எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
2023-ஆம் ஆண்டு டிசம்பர் தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரையில் ஜெஞரோம், கம்போங் சுங்கை ஜரோம், ஜாலான் மஹங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் அக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.
குற்றவியல் சட்டம், செக்ஷன் 130V உட்பிரிவு 1-இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால்
அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் இவ்வழக்கை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)