உலகம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்; முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்து

10/10/2025 12:17 PM

பிலிப்பைன்ஸ், 10 அக்டோபர் (பெர்னாமா) --   இன்று காலை, தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால், மின்டானாவோவின் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கையைப் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் விடுத்துள்ளது.

உள்ளூர் நேரம்படி, காலை சுமார் 9.43 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மனாய் மாநகராட்சியிலிருந்து வடகிழக்கே சுமார் 44 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தொடக்கத்தில், ரிக்டர் அளவைக் கருவில் 7.6-ஆக பதிவானதாக, அந்நிறுவனம் தெரிவித்தது.

கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுப்படுகின்றனர்.

மேலும், ஒரு மீட்டருக்கும் அதிகமான ஆபத்தான சுனாமி அலைகள் சில நிமிடங்கள் முதல் மணிநேரங்களுக்குள் மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளைத் தாக்கக்கூடும் என்று, அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)