கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) -- 47 ஆயிரம் 920 கோடி ரிங்கிட் மதிப்பிலான 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
2025-ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 42 ஆயிரத்து 100 கோடி ரிங்கிட்டைக் காட்டிலும் 200 கோடி ரிங்கிட் குறைவாக இருந்தாலும், பிரதமர் அன்வார் தலைமைத்துவத்தின் கீழ், 40 ஆயிரம் கோடி ரிங்கிட்டுக்கும் மேலாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
''2026 வரவு செலவுத் திட்டம், GLIC நிதி, மத்திய சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனங்கள், எம்.கே.டி நிறுவனங்கள் உள்ளிட்ட தேசிய வளங்களை, பொது செலவினங்கள் மூலம் திரட்டி மேம்படுத்தும். இவ்வாண்டின் மொத்த பொது செலவினத் தொகை, 47,000 கோடி ரிங்கிட் ஆகும். கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 45,200 கோடி ரிங்கிட்டாக இருந்தது'', என்றார் அவர்.
இன்று மக்களவையில் 2026 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த நிதி அமைச்சருமான அன்வார், நாடு முழுவதும் உள்ள மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியுடன் நிதித் தேவைகளை சமநிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அந்த ஒதுக்கீட்டு அதிகரிப்பு பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்துவதோடு, வளங்களின் நியாயமான மற்றும் பயனுள்ள விநியோகத்தை உறுதி செய்வதே, இந்த வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய கவனம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)