மலாக்கா, 12 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த வாரம் மலாக்காவில் உள்ள ஒரு பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் மூன்றாம் படிவம் மாணவிக்கு தேவையான ஆதரவை கல்வி அமைச்சு வழங்கும்.
அந்த பதின்ம வயது பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு மருத்துவர்கள் உளவியல் ரீதியிலான ஆதரவை வழங்குவதாகவும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
''எனவே, அந்தந்த தரப்பினரால் குறிப்பாக இந்த பதின்ம வயது மாணவியின் பாதுகாப்பிற்காக, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,'' என்றார் அவர்.
இன்று, மலாக்கா கல்வித் துறை மற்றும் அம்மாநில போலீஸ் தலைமைதுவத்துடன் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர் ஃபட்லினா சிடேக் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
மேலும், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கான கட்டொழுங்கு மற்றும் உணர்வு ரீதியிலான ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் எஸ்.பி.எம் தேர்வெழுதவிருந்த நான்கு மாணவர்கள், தற்போது ஆறு நாள்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]