பொது

பேரிடர், மோதல்களால் ஐவரில் ஒருவருக்கு மன உளைச்சல்  - WHO

12/10/2025 05:17 PM

சைபர்ஜெயா, 12 அக்டோபர் (பெர்னாமா) -- இயற்கை பேரிடர் அல்லது மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஐவரில் ஒருவருக்கு மனச்சோர்வு, மன உளைச்சல் என  மனநலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம், WHO தெரிவித்துள்ளது. 

மலேசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும், MH370, MH17, ரனாவ் நிலநடுக்கம் மற்றும் பத்தாங் காலி நிலச்சரிவு போன்ற துயர சம்பவங்கள் உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.

பேரிடர்களால் ஏற்படும் மனநல நெருக்கடி, நாட்டில் மட்டுமில்லால் அனைத்துலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுவதாக கூறிய டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி, பாலஸ்தீன மோதல் உட்பட, போரால் பாதிக்கப்படுவோர் குறிப்பாக குழந்தைகளும் அவர்களது குடும்பங்களும் மிக கடுமையான தாக்கத்தை எதிர்கொள்வதாகவும் குற்றிப்பிட்டார்..

''எனவே சமூக உளவியல் ஆதரவு உண்மையிலேயே ஒரு மனித உரிமை என்பதை நினைவில் கொள்ளவும். அது மனிதநேயம், அது ஒரு உலகளாவிய மனித உரிமை. அது விருப்பமல்ல; ஆனால் அது வழங்கப்பட வேண்டும்,'' என்றார் அவர். 

இன்று, சைபர்ஜெயாவில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய மனநல மாதத்தை தொடக்கிவைத்து உரையாற்றும்போது சுல்கிஃப்லி அவ்வாறு தெரிவித்தார். 

இதற்கான ஆயத்த நடவடிக்கையாக, சுகாதார அமைச்சு MHPSS எனும் மனநலம் மற்றும்  சமூக உளவியல் ஆதரவு சேவையை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
(சிறப்பு அழைப்பு எண்: HEAL 15555)

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]