16 வயது மாணவி பள்ளியில் கொலை; இரு கூர்மையான ஆயுதங்களை போலீசார் மீட்டனர்

14/10/2025 05:35 PM

பெட்டாலிங் ஜெயா, 14 அக்டோபர் (பெர்னாமா)-- இதனிடையே இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பள்ளி ஒன்றில் 16 வயது மாணவி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரு கூர்மையான ஆயுதங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

சம்பந்தப்பட்ட அம்மாணவி உடலில் பல கத்திக்குத்துக் காயங்களுடன் பள்ளியின் கழிவறைக்கு அருகே இறந்து கிடந்தாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP  ஷம்சுதீன் மமத் தெரிவித்தார். மாணவியைக் கொலை செய்ததாக நம்பப்படும் அதே பள்ளியைச் சேர்ந்த 14 வயது மாணவன் விசாரணைக்கு உதவுவதற்காக சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

"அனைவரின் கவனத்திற்கு, கொலைக்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பள்ளி மாணவர்கள். அவர்கள் நண்பர்களாக இல்லாவிட்டாலும், ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், வெவ்வேறு படிவம் என்றாலும் ஒருவருக்கும் ஒருவர் தெரிந்து இருக்கலாம். இதுவரை நாங்கள் மேற்கொண்டிருக்கும் விசாரணையில், கொலைக்கு பகடிவதை காரணமல்ல என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்," என்றர் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி ஷம்சுடின் மாமாட்  

அலறல் சத்தம் கேட்டு கழிவறைக்குச் சென்று பாதிக்கப்பட்டவரைக் கண்ட ஆசிரியர் ஒருவர் காலை மணி 9.40-க்கு போலீசுக்கு தகவல் வழங்கியதாக குறிப்பிட்டார்.

கொலை சம்பவம் என்பதால் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

தடுப்புக் காவல் விண்ணப்பத்திற்காக சந்தேக நபர் நாளை பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுவார்.

மரணத்தின் காரணத்தைக் கண்டறிவதற்காக கொலை செய்யப்பட்ட அம்மாணவியின் உடல் நண்பகல் மணி சுமார் 12.55-க்கு பள்ளியிலிருந்து மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

விசாரணையை நிறைவு செய்யும் பொருட்டு, அம்மாணவியின் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)