பொது

நாட்டில் அரிசி கையிருப்பு 1.09 மெட்ரிக் டன்னாக பதிவு

25/02/2026 06:58 PM

கோலாலம்பூர், 25 பிப்ரவரி (பெர்னாமா) -- பிப்ரவரி மூன்றாம் தேதி நிலவரப்படி, நாட்டில் அரிசி கையிருப்பு 1.09 மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது.

பேரிடர் ஏற்பட்டால் நாட்டின் உணவு விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை முயற்சிகளில் இந்தக் கையிருப்பு நடவடிக்கையும் அடங்கும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.

''5.45 மாத தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான இரண்டு லட்சம் மெட்ரிக் டன் கையிருப்புகள் மற்றும் 889,285 மெட்ரிக் டன் வர்த்தக கையிருப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இரண்டாவதாக தற்போது நடைபெற்று வரும் ஐந்து பருவ நெல் நடவு திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்துவதும் இதில் அடங்கும்,'' என்றார் அவர்.

இன்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது முஹமட் சாபு இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் நீர் நிர்வகிப்பை மேம்படுத்துவதற்காக விவசாயத் துறையின் நீர் நிர்வகிப்பு செயல்முறையை மேம்படுத்துவதும் நவீனமயமாக்குவதும் விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான இதர நடவடிக்கைகளில் அடங்கும் என்றும் அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)