கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசியாவில் பெருநாள் என்றாலே சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கமாகும்.
இவ்வாண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியர்கள் உட்பட மற்ற இனத்தவரும் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
வார இறுதி விடுமுறை, வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிக்கான பொது விடுமுறை, அதனை தொடர்ந்து வரும் பள்ளி விடுமுறை, ஐம்பது விழுக்காட்டு டோல் கட்டணக் கழிவு ஆகியவை சொந்த ஊர்களுக்கு திரும்ப ஊக்கம் அளித்துள்ளன என்றே கூறலாம்.
சொந்த ஊர்களுக்கு செல்வது மகிழ்ச்சியான தருணம் என்றாலும் லட்சக் கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் சாலைகளில் பாதுகாப்பை முன்னிறுத்தி பயணிக்க வேண்டும் என்கிறார், மலேசிய சாலை பாதுகாப்பு மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் குழந்தையன் கேசி மணி.
தூரப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் வாகனம் ஓட்டுபவர் போதுமான உறக்கத்தைக் கொண்டிருப்பது அவசியமான ஒன்று என்று முனைவர் குழந்தையன் கேசி மணி தெரிவித்தார்.
பயணித்தின் போது, அளவுக் கடந்த தூக்கம் உண்டாகும் பட்சத்தில் ஓட்டுநர் ஒருவர் எடுக்க வேண்டிய குறுகிய உறக்கம் குறித்து அவர் விவரித்தார்.
''நீங்கள் 20-இல் இருந்து 30 நிமிடத்திற்குள் மட்டுமே உறங்க வேண்டும். அதற்கு கூடுதலாக உறங்கினால் உங்கள் உடல் அசதியாகும். அது பயணத்தைத் தொடர்வதற்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும்,'' என்றார் அவர்.
அதேவேளையில், ஒருவருக்கு micro sleep எனப்படும் திடீர் உறக்கம் வந்துவிட்டதைக் கண்டறிய தற்போது பல்வேறான இலவச செயலிகள் இருப்பதாகவும் முனைவர் குழந்தையன் குறிப்பிட்டார்.
''உங்களின் திறன்பேசியை உங்கள் முன் வைத்துவிட்டு பயணத்தைத் தொடங்க வேண்டும். உங்கள் கண்களின் அசைவை வைத்தே உங்களுக்கு உறக்கம் வந்துவிட்டதை அந்த செயலிகள் கண்டறியும். அதற்கான சமிக்ஞையை அது எழுப்பும்,'' என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதனிடையே, கடந்த 2024-ஆம் ஆண்டு நம் நாட்டில் ஒவ்வொரு 49 வினாடிக்கும் ஒரு சாலை விபத்தும், ஒவ்வொரு 80 நிமிடத்திற்கும் ஒரு மரணம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அவற்றில் பெரும்பாலும் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
தீபாவளி கொண்டாட்டத்திற்கான நீண்ட விடுமுறையை முன்னிட்டு சாலை பாதுகாப்பு தொடர்பில் முனைவர் குழந்தையன் சில பயனுள்ள ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]