புக்கிட் மெர்தாஜாம், 19 அக்டோபர் (பெர்னாமா) -- பினாங்கு, செபராங் பிறை மற்றும் மத்திய செபராங் பிறையைச் சுற்றியுள்ள பி40 பிரிவைச் சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு யயாசான் கித்தா அனாக் மலேசியா அறவாரியத்தின் கீழ் நேற்று தீபாவளி பரிசு கூடைகள் வழங்கப்பட்டன.
2021-ஆம் ஆண்டு நிறுவப்பட்டத்திலிருந்து, பினாங்கை முக்கிய தளமாக கொண்டு நாடு முழுவதும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், இந்த அறவாரியத்தின் கீழ் உதவி பெற்றிருப்பதாக பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.
''கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 200,000 பேர் கித்தா அனாக் மலேசியா அறவாரியத்தின் கீழ் உதவி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அரசு சாரா நிறுவனங்கள் மிகவும் நேர்மறையான பங்கை வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்'', என்றார் அவர்.
மேலும், தீபாவளி கொண்டாடுபவர்களின் வாழ்க்கை செலவீனங்களைக் குறைக்கும் நோக்கில் அவர்களுக்கு அடிப்படை பொருள்கள் வழங்கப்பட்டதாக, அதன் வாரிய இயக்குநர் பேராசிரியர் முனைவர் சரஸ்வதி சின்னசாமி கூறினார்.
சுமார் 700 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், அவர்களில் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு Jejak Kasih திட்டத்தின் மூலம் வீடுகளுக்குச் சென்று உதவிகள் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, பினாங்கு, ஜூரு வட்டாரத்தில் உள்ள பத்து கவான், புக்கிட் மெர்தாஜாம் மற்றும் நிபோங் திபால் ஆகிய மூன்று நாடாளுமன்றங்களைச் சேர்ந்த உதவி தேவைப்படும் இந்தியர்களுக்குப் பரிசு கூடைகள் வழங்கப்பட்டதாக அறவாரியத்தின் தோற்றுநர் புவநீதன் இளங்கோவன் தெரிவித்தார்.
பரிசு கூடைகள் மட்டுமின்றி மாணவர்களின் இயங்கலை கற்றல் கற்பித்தலுக்கு ஏதுவாக கையடக்க கணினி, மருத்துவ உதவிகள் மற்றும் பிற கல்வி திட்டங்களுக்கான உதவிகளும் வழங்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)