பொது

மகிழ்ச்சியின் திளைப்பில் தீபாவளிக்கு வீடு திரும்பும் மக்கள்

19/10/2025 06:41 PM

தி.பி.எஸ். ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கோலாலம்பூர், 19 அக்டோபர் (பெர்னாமா) --   கல்வி, வேலை, திருமண வாழ்க்கை என்று பல சூழ்நிலைகளால் குடும்பத்தையும், சொந்த வசிப்பிடத்தையும் விட்டு, பிரிந்து சென்றவர்கள், மீண்டும் தங்களின் மண் வாசத்தை அனுபவிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும் தருணம் இது.

அந்த வகையில், கோலாலம்பூர் தி.பி.எஸ்  ஒருங்கினைந்த பேருந்து முனையம் இன்று காலை முதல் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.

வீட்டிற்குச் செல்லும் ஆர்வத்தில் இருந்த சிலரின் மகிழ்ச்சியான தருணங்களை பெர்னாமா செய்திகளுக்காக கேட்டறிந்தார், பயிற்சி நிருபர் ரோவன் கொரிந்த் ஜோ.

சொந்த வாகனத்தில் பயணிப்பதற்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும், சிக்கனமான பயணத்தை மேற்கொள்வதற்கு பொதுப்போக்குவரத்து சேவை உறுதுணையாக உள்ளதை பலர் மறுக்கவில்லை.

வெகு நாட்களுக்கு பின்னர், தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் ஆவல் மேலோங்கியுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வெளி சுற்றுச்சூழலை இரசித்து பார்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் யோகஷீலா தமிழரசு.

இவ்வாண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமைக் கொண்டாடப்படுவதால், இதர இனத்தவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த நீண்ட விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு திரும்புவதையும் இங்கு காண முடிந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)