பொது

நாடு முழுவதும் விமரிசையான தீபாவளி கொண்டாட்டம்

20/10/2025 07:37 PM

கோலாலம்பூர், அக்டோபர் 20 (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடினர்.

நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள பழமையான கோவிலான ஶ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலில் காலை ஏழு மணி தொடங்கி தீபாவளி சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளி என்பதால், இன்று கோவிலுக்கு சுமார் 5000 பேர் வரை வருகை புரியலாம் என்று அதன் தலைவர் ஆர்.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

சபா கோத்தா கினபாலுவில் உள்ள ஶ்ரீ பசுபதிநாத் ஆலயத்திலும் சுமார் 1000 பேர் தீபாவளி வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

சபாவில் இந்தியச் சமூகம் சிறுபான்மையினராக இருந்தாலும், பல்வேறு இன மக்கள் வருகையால் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதாக ஆலயத் தலைவர் டத்தோ டாக்டர் கே. மாதவன் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில் அமைந்திருக்கும், அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்திலும், தீபாவளி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

காலை 6 மணி தொடங்கியே பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்ட நிலையில், இன்று சுமார் 3000 பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வண்ணமயமான பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த பக்தர்கள், லட்டு போன்ற இனிப்பு பலகாரங்களை பகிர்ந்து கொண்டனர்.

பினாங்கு மாநிலத்தில் காலையிலேயே மழை பெய்தாலும், செபெராங் பிராய் ஜாலான் பாரு முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் புத்தாடை உடுத்தி இன்முகத்துடன் வந்திருந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இன்று காலையில் ஈப்போவில் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல், கல்லுமலை அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் திரளான பக்தர்கள் தீபாவளி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

நண்பகலைக் கடந்தும் பலத்த மழை பெய்து வந்த நிலையில், ஆலயத்திற்கு அதிகமான பக்தர்கள் வந்த வண்ணமாகவே இருந்தனர்.

கிளந்தானில் மிக குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்களே வாழ்ந்தாலும், அங்கும் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இங்கு மிக குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்களே ஆலயத்திற்கு வருவதால், தீபாவளி வழிபாடும் மிக அமைதியாக நடைபெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)