விளையாட்டு

உலக தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்த எஸ். சிவசங்கரி

21/10/2025 08:01 PM

கலிபோர்னியா ரெட்வுட் நகரம், அக்டோபர் 21, (பெர்னாமா) -- இதனிடையே, அமெரிக்க பொது ஸ்குவாஷ் போட்டியிலிருந்து தொடக்கத்திலேயே விடைபெற்றாலும், உலக தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது ஆறாவது இடத்தை எஸ். சிவசங்கரி பிடித்துள்ளார்.

26 வயதுடைய சிவசங்கரிக்கு இதுவரை அடைந்த மிக உயரிய தரவரிசை இதுவாகும் என்பது தொழில்முறை ஸ்குவாஷ் சங்கமான, பி எஸ் ஏ திங்கட்கிழமை வெளியிட்ட தரவரிசை காட்டுகிறது. கடந்த வாரம் கலிபோர்னியா, ரெட்வுட் நகரத்தில் நடைபெற்ற சிலிக்கோன் வேல்லீ பொது ஸ்குவாஷ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பிறகு சிவசங்கரியின் தரவரிசை உயர்ந்தது.

அதில், இறுதி ஆட்டத்திற்கு தேர்வாக, எகிப்திய வீராங்கனை கென்சி ஏமான், அமெரிக்க விளையாட்டாளர் அமான்டா ஷோபி மற்றும் எகிப்தைச் சேர்ந்த சல்மா ஹனி ஆகியோரை சிவசங்கரி தோற்கடித்தார். இந்த அடைவுநிலையின் மூலம், ஜப்பானிய வீராங்கனை சதொமி வதனபெ மற்றும் பெல்ஜிய பிரதிநிதி தின்னே கிலிஸ் ஆகியோரைக் கடந்து சிவசங்கரி, உலகின் முதல் ஆறு இடங்களுக்குள் இடம் பிடித்தார்.

அதேவேளையில், நாட்டின் மற்றொரு விளையாட்டாளரான ரேச்சல் அர்னால்டு உலக தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 19ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஆடவர் பிரிவில், நாட்டின் முதல்நிலை விளையாட்டாளரான ங் இயேன் யோவ் உலகத் தரவரிசையில் தமது 12ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)