ஜாலான் பார்லிமன், 23 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த மாதம் 27ஆம் தேதி, பேராக், ஈப்போவில் உள்ள பள்ளி ஒன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து கருத்துரைத்த பிரதமர் அச்செயல் நாட்டின் கல்வி சித்தாந்தம் மற்றும் மதிப்புகளுக்கு முரணானது என்று சாடினார்.
பள்ளி நேரத்திற்கு அப்பாற்பட்டு வெளி தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களை முன்னேற்றும் கல்வி நிறுவனத்தின் கௌரவத்தையும் சூழலைப் பாதுகாக்கும் கொள்கைகளையும் மீறுவதாக அவர் கடிந்துகொண்டார்.
"பள்ளி நேரத்திற்குப் பிறகு பள்ளிச் சூழல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். என்னை பொருத்தவரை விதிகள் மீறும் நடவடிக்கைகளுக்குப் பள்ளி மண்டபத்தைப் பயன்படுத்தக்கூடாது. அது பொதுவில் வாடகைக்கு விடப்பட்டிருந்தாலும் கூட. மது, சூது. இது மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில்லை. எனவே, இது நமது சொந்த கல்வி தத்துவத்தின் கருத்தை மீறுகிறது,'' என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இது இஸ்லாமிய அல்லாத பள்ளிகளில் நடத்தப்பட்டாலும் மது அல்லது சூதாட்டம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தேசிய கல்விக் கொள்கைகளுக்கு முரணாவதாகப் பிரதமர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)