சிப்பாங், 24 அக்டோபர் (பெர்னாமா) -- அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி உட்பட வட்டார புவிசார் அரசியல் பிரச்சனைகளின் வளர்ந்து வரும் சிக்கலான தன்மையை நிவர்த்தி செய்வதோடு இவ்வட்டாரத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான முயற்சிகளுக்கு ஆசியான் தொடர்ந்து நிலைப்படுத்தும் பங்கை ஆற்றுகிறது.
ஆசியானின் அத்தகைய பங்களிப்பு படிப்படியாக அதிகரித்தாலும் வட்டாரத்தில் அமைதி மற்றும் கலந்துரையாடலை நிலைக்க செய்வதில் இந்த அமைப்பின் கூட்டு அணுகுமுறை மிக முக்கியமானது என்று பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் மா. திரேசா பி. லசாரு தெரிவித்தார்.
''நம்மிடம் உள்ள இப்புவிசார் அரசியல் சக்திகளை வழிநடத்துவதில் ஆசியான் எப்போதும் தனது பங்கைக் கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். அது அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் நான் நம்புகிறேன். ஆனால் பங்களிப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்,'' என்றார் அவர்.
இன்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வில் வந்தடைந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய லசாரு அவ்வாறு கூறினார்.
47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முடிவில், மலேசியாவிடமிருந்து ஆசியான் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸ் ஏற்றுக் கொள்ளும்போது முக்கிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆசியானின் கூட்டு முயற்சிகளைத் தொடர தமது நாடும் உறுதிப் பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]