விளையாட்டு

பிஃபாவின் குற்றச்சாட்டு; சுயாதீன குழுவின் தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி நியமனம்

27/10/2025 01:55 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) --   ஹரிமாவ் மலாயா காற்பந்தாட்டக்காரர்கள் எழுவரை அனைத்துலக காற்பந்து சம்மேளனம் பிஃபா இடைநீக்கம் செய்தது தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சுயாதீன செயற்குழுவிற்கு முன்னாள் தலைமை நீதிபதி துன் முஹமட் ரவுஸ் ஷரிஃப் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து, இன்று மலேசிய காற்பந்து சங்கம் எஃப்.ஏ.எம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறது.

விசாரணை செயல்முறை நியாயமாக, வெளிப்படையாக மற்றும் தொழில் ரீதியாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக, எஃப்.ஏ.எம்-முக்கு தொடர்புடைய எந்தவொரு நபரையும் ஈடுபடுத்தக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டை, அந்த அறிக்கையின் வழி எஃப்.ஏ.எம் மீண்டும் வலியுறுத்தியது.

விசாரணை செயற்குழுவிற்கான உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் முஹமட் ரவுஸுக்கு வழங்கப்பட்டிருப்பதாக எஃப்.ஏ.எம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இவ்விவகாரத்தில் விசாரணை செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை, முஹமட் ரவுஸ் மேற்கொள்வார் என்று தாம் நம்புவதாக எஃப்.ஏ.எம் கூறியது.

சம்பந்தப்பட்ட ஏழு ஆட்டக்காரர்களுக்கான அபராதம் மற்றும் இடைநீக்கம் குறித்து எஃப்.ஏ.எம் செய்த மேல்முறையீடு தொடர்பான முடிவு, இம்மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)