பினாங்கு, 28 அக்டோபர் (பெர்னாமா)-- கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி பினாங்கு, பெர்மாதங் பாஹ், அம்பாங் ஜஜார் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஆடவர் ஒருவரின் சடலம் பயணப் பெட்டி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட வழக்கு தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு உள்ளூர் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
41 வயதான ஒங் வேய் ஹாய் என்பவரே அவ்வாடவர் என்று, செபெராங் பேரை உதாரா மாவட்ட போலீஸ் தலைவர் ACP அனுவார் அப்துல் ரஹ்மான்தெரிவித்தார். பட்டர்வொர்த், A-7-07, வில்லா தஞ்ஜொங், ஜாலான் வில்லா தஞ்ஜொங் எனும் முகவரியில் அவ்வாடர் தங்கியிருப்பதாக ACP அனுவார் கூறினார்.
சம்பந்தப்பட்ட அவ்வாடவர் குறித்தோ அல்லது இவ்வழக்கு குறித்தோ தகவல் அறிந்தவர்கள் விசாரணை அதிகாரி ASP நோர்ஹஸ்லிந்தா ரஹ்மத்தை 04-576 2222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அருகில் இருக்கும் எந்தவொரு போலீஸ் நிலையத்தையும் அவர்கள் தொடர்புகொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார். கொலை சம்பவம் என்பதால் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு பினாங்கு மற்றும் பேராக்கின் பல இடங்களில் 24-இல் இருந்து 42 வயதிற்குட்பட்ட இரு ஆடவர்களையும் இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)