47-வது ஆசியான் மாநாட்டை நிறைவுச் செய்து அதிகாரப்பூர்வமாக பிலிப்பைன்சிடம் ஒப்படைத்தது மலேசியா

28/10/2025 06:15 PM

கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த மூன்று நாள்களாக தொடந்த 47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு, பல முக்கிய விவாதங்கள் மற்றும் பயனுள்ள உரையாடல்களுக்குப் பின்னர், வட்டார அரசதந்திர உறவுகள் புதிய அத்தியாயத்தை அடைந்து, வெற்றிகரமாக இன்று நிறைவடைந்தது.

2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்று தற்போது இறுதிக் கட்டத்தில் நுழையும் மலேசியா, அப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக பிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது.

2026-ஆம் ஆண்டில் ஆசியானுக்கு தலைமையேற்கவிருக்கும் பிலிப்பைன்ஸ்க்கு, ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், அதன் அதிபர் ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியரிடம் தலைமைச் செங்கோலை அன்வார் ஒப்படைத்தார்.

லாவோசிடமிருந்து தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்து, மலேசியா அதன் பதவிக் காலம் முழுவதும் ஆசியானின் ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தது.

"உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை" என்ற கருப்பொருளின் கீழ், மலேசியாவின் தலைமைத்துவம் மற்றும் பதவிக்காலத்தில் 300க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், டிசம்பர் 31-ஆம் தேதி வரையில், இன்னும் சில கூட்டங்களும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

ஆசியானின் ஒற்றுமையை மேலொங்கச் செய்வதற்கும், வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், அதன் கூட்டமைப்பின் மீள்தன்மையை அதிகரிப்பதற்கும் மலேசியா கொண்டிருந்த உறுதிப்பாட்டை அதன் வெற்றி பிரதிபலிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)