பொது

ரியோ டி ஜெனிரோவில் போலீசார் அதிரடி நடவடிக்கை; 64 பேர் பலி

29/10/2025 02:46 PM

பிரேசில், 29 அக்டோபர் (பெர்னாமா) -- பிரேசில், ரியோ டி ஜெனிரோவில் இதுவரை இல்லாத அளவுக்கு போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர்.

கோப்30 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சநிலை மாநாடு தொடர்பான உலகளாவிய நிகழ்ச்சிகளை அந்நகரம் ஏற்று நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மிகப்பெரிய குற்றவியல் கும்பல் ஒன்றை குறிவைத்தது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2016 ஒலிம்பிக், 2024 ஜி20, மற்றும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாடுகள் ஆகியவற்றை ஏற்று நடத்திய ரியோவில், முக்கிய நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, குற்றவியல் கும்பலுக்கு எதிராக போலீசார் பெரிய அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அடுத்த வாரம், ரியோவில் காலநிலை மாற்றத்தை கையாளும் மேயர்களின் சி40 உலகளாவிய உச்சநிலை மாநாடு மற்றும் இளவரசர் வில்லியமின் அர்த்ஷாட் பரிசு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.

அதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில், உயிரிழந்தவர்களில் நான்கு போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர் என்பது உறுதியானது.

இது ரியோவின் முந்தைய போலீஸ் நடவடிக்கைகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)