பொது

47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு அரச தந்திர ரீதியாக பயனளித்துள்ளது

29/10/2025 07:46 PM

கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) --   மலேசியாவின் அரச தந்திரத்தையும், பலத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்த 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடும், அதன் தொடர்புடைய கூட்டங்களும் நேற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றன.

ஆசியானின் 11 உறுப்பு நாடுகள் உட்பட பல அழைப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் வட்டார அமைதி, பொருளாதார வளர்ச்சி, உலக நாடுகளுக்கு இடையிலான வரி விதிப்பு, வணிகம், தொழில்நுட்ப முன்னேற்றம் என பல விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார மற்றும் அரச தந்திர ரீதியாக இம்மாநாடு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்து விளக்குகின்றார், மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் யூ.பி.என்.எம்-மின் மூத்த விரிவுரையாளர் முனைவர் நோர் அய்ஷா ஹனிஃபா.

11-வது உறுப்பு நாடாக தீமோர் லெஸ்தே ஆசியானில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல் அமைதி ஒப்பந்த கையெழுத்து உட்பட உலக நாடுகளின் அதிகாரத்துவம் பெற்ற தலைவராக கருதப்படும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வருகை மற்றும் பல வல்லரசு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் வருகை, ஆசியான் மாநாட்டிற்கு முத்தாய்ப்பாக அமைந்ததாக, முனைவர் நோர் அய்ஷா ஹனிஃபா கூறினார்.

''முக்கியமாக கம்போடியா தாய்லாந்து அமைதி ஒப்பந்தம், இதில் மலேசியாவின் பங்கு பெருமளவிற்கு புகழாரம் சூட்டப்பட்டது. இது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாமே அமைதி நடுவராக இருந்து உடன்பட்டார். இரண்டாவது, தீமோர் லெஸ்தே ஆசியானின் 11-வது உறுப்பு நாடாக இணைக்கப்பட்டது. மூன்றாவது, அமெரிக்கா அதிபர் டொனல்ட் டிரம்பின் வருகை'', என்று அவர் கூறினார்.

மேலும், ஆசியான்-தென் கொரியா உச்சநிலை மாநாடு, ஆசியான்+3, விரிவான வட்டார பொருளாதார பங்காளித்துவ கூட்டமைப்பு, RCEP, ஆசியான்-ஆஸ்திரேலியா மற்றும் ஆசியான்-நியூசிலாந்து உச்சநிலை மாநாடுகள் ஆகியவை வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உலகளாவிய சவால்களை ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்ததாக, அவர் தெரிவித்தார்.

''இதில் முக்கியமாக 'Akta 3' என்று சொல்லப்படும் மாநாடு புகழுக்குரியது. ஏனென்றால், இது ஆசியான் மற்றும் சீனாவுக்கு இடையிலான மாநாடாகும். இதில் நிறைய வாணிப வாய்ப்புகள், முக்கியமாக இலக்கவியல், தொழில்நுட்பம், தொழில்நுட்ப சுற்றுச்சூழல் என்று நிறைய விவகாரங்கள் பேசப்பட்டன'', என்றார் அவர். 

இதனிடையே, உச்சநிலை மாநாட்டின் போது நடைபெற்ற கலந்துரையாடல்கள் பலவற்றில் நாட்டின் அரச தந்திரம் முறை சிறப்பான முறையில் கையாளப்பட்டதாக, முனைவர் நோர் அய்ஷா கூறினார்.

குறிப்பாக, வர்த்தகம், முதலீடு, உலக நாடுகளுக்கு இடையிலான வரி விதிப்பு போன்ற விவகாரங்களில் நாட்டின் அரச தந்திர பெரிதும் துணைச் செய்ததாக, அவர் விவரித்தார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாடு, ஆசியான் வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து இறையாண்மை கொண்ட நாடுகளையும் ஒரே வட்டாரத்தின் கீழ் முழுமையாக இணைத்துள்ளதாக பெர்னாமா செய்திகள் தொடர்புக் கொண்டபோது முனைவர் நோர் அய்ஷா அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)