விளையாட்டு

FAMஇன் மேல்முறையீட்டை FIFA நிராகரிப்பு; CASஇடம் மேல்முறையீடு செய்ய திட்டம்

04/11/2025 07:46 PM

கோலாலம்பூர், 4 நவம்பர் (பெர்னாமா) -- FIFA ஒழுங்குமுறைச் சட்டம், FDC சட்டப்பிரிவு 22-இன் கீழ் ஆவண மோசடி தொடர்பான குற்றங்களுக்காக மலேசிய காற்பந்து சங்கம் FAM மற்றும் அயல் நாட்டு ஆட்டக்காரர்கள் எழுவருக்கு எதிராக அதன் ஒழுங்குமுறைச் செயற்குழு விதித்த தண்டனையை அனைத்துலக காற்பந்து சம்மேளனம் FIFA-இன் மேல்முறையீட்டு செயற்குழு நிலைநிறுத்தியுள்ளது.

FAM மற்றும் சம்பந்தப்பட்ட ஏழு ஆட்டக்காரர்களின் மேல்முறையீட்டை நிராகரித்ததை FIFA-இன் மேல்முறையீட்டு செயற்குழு உறுதிப்படுத்தியது. 

கேப்ரியல் ஃபெலிப் அரோச்சா, ஃபாகுண்டோ கார்செஸ், ரோட்ரிகோ ஹோல்கடோ, இமானோல் மச்சுகா, ஜோவா ஃபிகியூரிடோ, ஜான் இராசபால் மற்றும் ஹெக்டர் ஹெவெல் ஆகியோரே அந்த ஏழு ஆட்டக்காரர்களாவர்.

ஓர் ஆட்டக்காரருக்கு தலா 11 ஆயிரம் ரிங்கிட் அபராதம் என்ற அடிப்படையில், சுமார் 18 லட்சம் ரிங்கிட் அபராதம் செலுத்த FAM-மிற்கு உத்தரவிடப்பட்டது.

மேல்முறையீட்டு ஆவணங்களை ஆராய்ந்தோடு இவ்விவகாரம் தொடர்பான விளக்கத்தை செவிமடுத்ததைத் தொடர்ந்து அனைத்து மேல்முறையீடுகளையும் நிராகரிக்க முடிவு செய்தப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக FIFA தெரிவித்தது.

மேலும், அந்த ஏழு ஆட்டக்காரர்களும் காற்பந்து தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுவதிலிருந்து 12 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தாங்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டை FIFA நிராகரித்த அதிகாரப்பூர்வ முடிவை FAM உறுதிப்படுத்தியுள்ளது.

முழு விவரங்களைப் பெறுவதற்காக FIFA-வை எழுத்துப்பூர்வமாக கேட்டுக் கொள்ளவிருப்பதாக FAM-இன் இடைக்காலத் தலைவர் டத்தோ மொஹமட் யூசோஃப் மஹாடி தெரிவித்தார்.

மேலும் அம்முடிவிற்கான விளக்கமான எழுத்துப்பூர்வ காரணங்களைப் பெற்ற பின்னர் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் C-A-S-விடம் மேல்முறையீடு செய்வதற்கான அடுத்த நடவடிக்கையை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழ்நிலையை FAM முதல் முறையாக எதிர்கொள்வதால் அதன் வழக்கறிஞர்களும் நிர்வாகமும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)