உலகம்

கரூர் சம்பவத்துக்கு பிறகு; தவெக கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்

05/11/2025 06:43 PM

தமிழ்நாடு, 5 நவம்பர் (பெர்னாமா) -- தமிழ்நாட்டில் கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகம், தவெக கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு தங்கள் கட்சிப் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

விஜயை முதலமைச்சர் வேட்பாளராகவும் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானமும் அதில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரூர் சம்பவத்தை அடுத்து சுமார் ஒரு மாதம் கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கி அமைதியாக இருந்த நேரத்தில் தங்கள் மீது வன்ம அரசியல் பரப்பப்பட்டதாக விஜய் பேசியுள்ளார்.

இதற்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக கூறிய அவர், தவெக சார்பாக, அனைத்து கட்சிகளுக்கும் சமமான முறையான ஒரு செயல்பாட்டு தர விதிமுறை எஸ்.ஓ.பியை வழங்க உயர்நீதிமன்றத்தையும் நாடி இருப்பதாக கூறியுள்ளார்.

பெர்னாமா  

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)