கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- தமிழ் சினிமா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி புகழ்பெற்ற கைதி திரைப்படம் இன்று மலேசியாவில் 'BANDUAN' என்ற பெயரில் மலாய்மொழியில் மறு உருவாக்கம் கண்டுள்ளது.
நாளை, நவம்பர் 6 தேதி தொடங்கி நாடெங்கும் 'BANDUAN' திரைக்கு வரும் நிலையில், அதன் சிறப்பு காட்சியைக் காண்பதற்கு கைதி திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் கார்த்தி சிவகுமார் சிறப்பு வருகை புரிந்திருந்தார்.
Number Twenty One Media மற்றும் Dream Warrior Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் 'BANDUAN' திரைப்படத்தை இயக்குநர் க்ரோல் அஸ்ரி இயக்கியுள்ளார்.
இத்திரைபடத்தில், நாட்டின் பிரபல உள்ளூர் கலைஞரான டத்தோ ஏரோன் அசிஸ், நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தை ஏற்று நடத்திருக்கின்றார்.
மிரட்டலான சண்டைக் காட்சிகளுடன் தமது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த, ஏரோன் அசிஸூக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இத்திரைபடத்தின் மூலம் கிடைத்துள்ளது.
அவருடன் பிரபல உள்ளூர் கலைஞர்களான டத்தோ ரோஷாம் நோர், டத்தோ அஃபிடின் ஷவூக்கிi, ஃபடில் மசூட், அட்லின் அமான் ரமிலி, ஏஸ்மா டெனியல் உட்பட பலர் நடித்துள்ளனர்.
மலேசிய கலாச்சாரம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ப மலாய் மொழியில் உருவாக்கம் கண்டிருக்கும் 'BANDUAN' பல்லின ரசிகர்களைக் கவரும் என்று அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கல்யாண தேவன் தெரிவித்தார்.
மறுஉருவாக்கத்திற்கு கைதி திரைப்படத்தை தேர்வு செய்ததற்கான காரணத்தை விளக்கிய அவர், திரையுலகில் தமது எதிர்காலத் திட்டங்களையும் வெளிப்படுத்தினார்.
''கடந்த ஆண்டுதான் ஒரு படத்தை தேர்வு செய்த நிலையில், இந்தப் படம்தான் பெரிய மாற்றம் செய்ய வேண்டாம். அப்படி ஒருவானதுதான் இந்த பண்டுவான். அனைத்து மறு உருவாக்கமும் சிறப்பாக வருமா என்று தெரியாது. தயாரித்துவிட்டோம். எனவே, இதுதான் தொடக்கம். இதன் பிறகு, மறு உருவாக்கம் செய்கிறோமா என்பது தெரியாது. ஆனால், ஏதாவது ஒன்று செய்வோம்,'' என்றார் அவர்.
நேற்று செவ்வாய்க்கிழமை, 'BANDUAN' திரைப்படத்தின் சிறப்பு காட்சி கே.எல்.சி.சி-இல் உள்ள தி.ஜி.வி திரையறங்கில் ஒளியேறியப் பின்னர் கல்யாண தேவன் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, மலேசிய - இந்திய திரைப்படங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு வரவேற்க கூடிய ஒன்று என நடிகர் கார்த்தி பாராட்டினார்.
''எந்த அளவிற்கு சிறப்பாக உருவாக்க முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக செய்துள்ளனர். ஒரே மாதிரி எடுப்பது சிரமம். சில விஷயங்கள் மாற்ற செய்ய வேண்டியிருக்கும். மாற்றினாலும், கைதி படத்தில் இருக்கும் விஷயங்களை இதிலும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்,'' என்றார் அவர்.
அதேபோல, ஒரு தமிழ் திரைப்படம் மலாய் மொழியில் வெளியீடு காண்பது பெருமை என்று அதில் நடித்திருக்கும் சில உள்ளுர் இந்திய கலைஞர்கள் கூறினர்.
''இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் கதைக்கு சுவாரசியம் அளிக்கக் கூடிய கதாப்பாத்திரம் எனக்கு கொடுக்கப்பட்டது. கைதி படத்திலுள்ள அனைத்து சிறப்பு காட்சிகளும் இந்த படத்தில் நியாயப்படுத்தப்பட்டுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை," என ஜோஷுவா மைக்கல் கூறினார்.
''மலேசியாவில் தமிழ் படம் ஒன்றை மறுவுருவாக்கம் செய்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 'BANDUAN' படத்தில் நான் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். வரும் காலங்களின் இது போன்ற படங்கள் வெளியீடப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன்,'' என்று தியாகு.பி பகிர்ந்துக்கொண்டார்.
மேலும், சிறப்பு காட்சியைப் பார்த்த ரசிகர்கள் சிலரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
"மலேசியாவில் மலாய் மொழியில் மொழிப்பெயர்த்து இப்படத்தை வெளியீட்டது நாம் எல்லாருக்கும் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி. படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பிரம்மாதமாக நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தமிழில் பார்த்தபடி இல்லாமல் மலேசியச் சாயாலில் இப்படத்தை எடுத்தது பெருமைக்குரிய விஷயம்,'' என்றார் பிரஷாந்த் மேனன்.
"இந்த திரைப்படத்தை தமிழில் பார்த்ததும், இப்பொழுது மலாய் மொழியில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததற்கும் மகிழ்ச்சி. இரண்டு படங்களுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் திரைப்படத்தின் தரம் எவ்வகையிலும் குறையவில்லை. தமிழ் திரைப்படம் அளவுக்கு இப்படத்தை இயக்கிருப்பது பாராட்டக்குரியதாகும். இன்னும் நிறைய படங்கள் இவ்வாறு வெளிவர வேண்டும்,'' என்று கணேஸ்வரி சுப்ரமணியம் தெரிவித்தார்.
''கைதி திரைப்படத்தை மலேசியாவில் மறுவுருவாக்கம் செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், கைதிக்கு மலேசியாவில் ரசிகர்கள் அதிகம். அவர்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமையும். மலாய் மொழியிலும் படம் அருமை,'' என்றார் தனாம்பிகை அன்பிகாபதி.
மலேசியாவில் 138, புருணையில் ஐந்து, அமெரிக்காவில் மூன்று மற்றும் கனடாவில் ஏழு என நாளை தொடங்கி 'BANDUAN' திரையரங்களில் வெளியீடு காண்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)