பொது

80,90ஆம் ஆண்டு பாடல்களைத் தாங்கி மலரும் எஸ்.என். முத்துவின் 'ஆத்ம ராகங்கள்' இன்னிசை இரவு

06/11/2025 05:17 PM

கோலாலம்பூர், 06 நவம்பர் (பெர்னாமா) -- இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் மலர்ந்த புகழ்ப் பெற்ற பாடல்களை தொகுப்பாக கேட்டு மகிழ்வதற்கு மலேசிய ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.

உள்நாட்டுக் கலைஞர் எஸ்.என்.முத்துவின் முயற்சியில் 'ஆத்ம ராகங்கள்' என்ற தலைப்பில் நாளை நவம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு மணி 7.30-க்கு இந்த இசை நிகழ்ச்சிக்கு அரங்கேறவுள்ளது. 

தமிழ்நாட்டில் ஒளியேறிய சூப்பர் சிங்கர் பாடல் போட்டியின் வெற்றியாளர் பாடகர் 'மூக்குத்தி முருகன்' என்றழைக்கப்படும் முருகன் ராஜ்- உடன் உள்ளூர் கலைஞர்கள் பலரும் ரசிகர்களுக்கு இசை விருந்தை படைப்பதற்கு காத்திருக்கின்றனர்.

சிறுவயது முதலே இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை மீது கொண்ட தீரா காதலால், ஆண்டுக்கு இருமுறையேனும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களை வரழைத்து இசைநிகழ்ச்சி நடத்தி வருவதாகக் கூறிய முத்து, இது தமது 23ஆவது நிகழ்ச்சி என்றும் தெரிவித்தார்.

இளையராஜா திரைக்கு எழுதிய முதல் பாடலான இதயம் ஒரு கோயில் பாடலில் இருந்து தான் 'ஆத்ம ராகங்கள்' என்ற தலைப்பை தாம் தேர்வு செய்து, இதுநாள் வரை அதே தலைப்பில் நிகழ்ச்சியையும் நடத்தி வருவதாக அவர் கூறினார்.

இம்முறை நடைபெறும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து முத்து பகிர்ந்து கொண்டார்.

"இந்த நிகழ்ச்சியின் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நான் பாடுவேன். அதேபோல பாடகர் ஜீவா மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல்களைப் பாடுவார். வளர்ந்து வரும் பாடகர் ஷான் செல்வராஜ் கே.ஜே.யேசுதாஸ் பாடல்களைப் பாடுவார். பெண்களில் சரிகமப புகழ அருளினி, புவனேஸ்வரி, வானம்பாடி சுகுணா ஆகியோருடன் ஹரிணி என்பவரும் பாடல்கள் பாடுவார்," என்று முத்து தெரிவித்தார்.

பி.ஆர்.ஜெயசீலன் தொகுத்து வழங்கும் இந்த இசை நிகழ்ச்சியில், பாடலுடன், ஶ்ரீ ரங்கநாதர் பரதாலயத்தைச் சேர்ந்த மாணவிகளின் நடனப் படைப்புகள் உள்ளிட்ட இன்னும் சில சிறப்பு அங்கங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மறைந்த பின்னணிப் பாடகர் மலேசிய வாசுதேவனின் பாடல்களை விரும்பும் ரசிகர்களுக்கு, அவர் பாடிய சிறந்த பாடல்களை பாடி மகிழ்விப்பதற்காகாக தமிழ்நாட்டிலிருந்து மூக்குத்தி முருகனையும் தாம் அழைத்து வந்துள்ளதாக அவர் கூறினார்.

"முத்து தேர்வு செய்து கொடுத்த பல பாடல்கள் இதுவரை மேடையில் நான் பாடாத பாடல்கள். அனைத்துமே கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. இந்த நிகழ்ச்சி எந்த வகையிலும் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாது. மேலும் இங்குள்ள பாடகர்கள் மற்றும் இசை வாத்தியக் கலைஞர்களின் திறமை பாராட்டுக்குரியது " என்று தமிழ்நாட்டுப் பாடகர் மூக்குத்தி முருகன் என்ற முருகன் ராஜ்  தெரிவித்தார்.
 
சிலாங்கூர், சுபாங் ஜெயா, KOMPLEKS TAN SRI JEFFREY CHEAH-வில் அமைந்துள்ள JEFFREY CHEAH அரங்கில் முதன் முறையாக  நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை நாளை அரங்கு நுழைவாயிலில் நேரடியாகவும் வாங்கிக் கொள்ளலாம் என்று முத்து கூறினார்.

"வழக்கமாக நிகழ்ச்சிக்கு வரவிரும்பும் பலர் டிக்கெட் விலையைக் குறைத்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வார்கள். அனைவரும் இந்த நிகழ்ச்சியை உளமாற பார்த்து ரசிக்க வேண்டும் என்பதால், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டிக்கெட் விலையைக் குறைத்து கொடுக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் அரங்க நுழைவாயிலில் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம்," என்றார் அவர்.

தரமான மலேசியப் பாடகர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் திரளாக கலந்து ஆதரவு நல்குமாறு இன்று பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய நேர்க்காணலின் போது முத்து கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் மேல்விவரங்களுக்கு 016 3497196 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)